--- --:--:-- --

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசின் அறிவிப்பாணை நிறுத்திவைப்பு..! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!!

2.2

தமிழகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் 10,11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளி, கல்லூரி திறப்பும் எப்போது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்த கொரோனா காலத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து செய்யும் குளறுபடிகளும் குழப்பத்திற்கு ஒரு முக்கிய காரணமாகி விட்டது.

 

கொரோனா தொற்று கூடிக் கொண்டே செல்லும் நிலையில், தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்பதை அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகமோ அக்டோபர் 1-ந் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் சம்மதக் கடிதத்துடன் பள்ளிகஞக்கு செல்லலாம் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனை பள்ளிக் கல்வித்துறையும் அரசாணையாக வெளியிட்ட நிலையில், இந்த உத்தரவு பெற்றோர், ஆசிரியர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் செங்கோட்டையனும் பள்ளிகள் திறப்பு குறித்து மாறுபட்ட கருத்தை தெரிவித்ததுடன், முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை நடைபெறும் மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆராய்ந்த பின் உரிய முடிவெடுக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon