மத்திய அரசு அறிவித்துள்ள இரண்டு சிறப்பு கடன் திட்டங்கள்..!
மாநிலங்கள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக இரு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பாரதிய ஜனதா அல்லாத பிற மாநில அரசுகள் எதிர்த்துள்ளனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் 41வது கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் மாநில அரசுகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் பற்றாக் குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதில் 65 ஆயிரம் கோடி ரூபாயை பொருட்கள் மீது செஸ் வரி விதிப்பதன் மூலம் பெற முடியும் என்றும் மீதமுள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையை மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக இரண்டு சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதல் சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடமிருந்து 97 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கார், குளிர்பானங்கள் புகையிலை பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையிலிருந்து அசல் மற்றும் வட்டி செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாநிலங்கள் ரிசர்வ் வங்கியிடமிருந்து சிறப்பு வட்டி விகிதத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்தக் கடன் இருப்புநிலை குறிப்பில் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையான 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயையும் மாநில அரசுகள் நிதி சந்தைகளில் கடனாகப் பெறலாம். அந்த கடனுக்கான வட்டியை மற்ற வருவாய் ஆதாரங்களை கொண்டே மாநில அரசுகள் செலுத்த வேண்டுமென்றும் கடனுக்கான அசல் தொகையை சேஸ் வரியின் மூலம் ஈடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் சிறப்பு கடன் திட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி ஆளும் சில மாநிலங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ளன.
அதேநேரம் பாரதிய ஜனதா ஆளாத மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாநிலங்கள் கடன் வாங்குவது அவர்களின் கடன் சேவை பொறுப்பை அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு அதன் கடனை பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.






