--- --:--:-- --

“தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை”!!புதிய கல்வி கொள்கைக்கு ‘கெத்தாக’ எதிர்ப்பு காட்டிய முதல்வர் எடப்பாடி!!

16

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் என்றும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தப் போவதில்லை என்றும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

நாடு முழுமைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது, இதில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வரும் திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் கொடுத்ததுடன், தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பின. மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் கள் கடிதமும் எழுதினர்.

 

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓபிஎஸ், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்திய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது.இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் .

 

முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் இரு​மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளன.

 

புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். எனவே மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது முதல் நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் எதிர்ப்பு காட்டாமல் இருந்து வந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், மும்மொழித் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon