மதுரையில் தகனம் செய்யப்பட்ட அங்கொடா லொக்காவின் உடல்..!
இலங்கை நிழல் உலக தாதா அங்கொடா லொக்காவின் உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது தொடர்பாக கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அங்கொடா லொக்காவின் இறப்பு திட்டமிட்ட நாடகம் ஆக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எத்தனையோ முறைகள் மூலம் போதை பொருள் கடத்தியவர்களை பற்றி செய்திகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் பருந்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவரை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அவர்தான் இலங்கை நிழல் உலக தாதா, கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா.
சர்வதேச குற்றவாளி, மோஸ்ட் வான்டட் கிரிமினலாக இருந்த அங்கொடா லொக்கா கோவையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அம்மானி தாஞ்சி என்ற பெண்ணுடன் அங்கொடா லொக்கா தங்கி இருந்ததாக தெரிகிறது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
அவரது அடையாளத்தை மறைத்து மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீப் சிங் என்றும் மதுரையில் வசிப்பதாகவும் போலி ஆதார் அட்டை தயாரித்ததாகவும் தெரிகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் அங்கொடா லொக்காவின் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கொடா லொக்கா மாரடைப்பால் மரணம் அடைந்ததாகவும் அவரது இறப்பு இயற்கையானது என்றும் சான்று அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கொடா லொக்காவின் உடலை மதுரைக்கு கொண்டு சென்று போலி ஆவணங்களை பயன்படுத்தி தத்தனேரி மின்மயானத்தில் தகனம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக சிவகாமிசுந்தரி, தியானேஸ்வரன், அமானி தாஞ்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கொடா லொக்காவின் உடல் கோவையில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? அவரது கூட்டாளிகள் யாரேனும் இங்கு தங்கி இருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க அங்கொடா லொக்கா நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி எனில் அவரது இறப்பு இயற்கையானது என சான்று அளிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
மற்றொருபுறம் லொக்கா இறப்பு ஒரு திட்டமிட்ட நாடகம் என்று சொல்லப்படுகிறது. வேறு ஒருவரின் உடலை தகனம் செய்துவிட்டு அது அங்கொடா லொக்கா என நம்ப வைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அங்கொடா லொக்கா தலைமறைவாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இறந்தது லொக்காவா அல்லது லோக்கல் ஆளா என்ற கேள்விக்கு காவல்துறை விசாரணை தான் பதில் தரவேண்டும்.






