கொரோனா நோயாளியின் 19 நாள் சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் பில்..! சென்னை தனியார் மருத்துவமனையின் அனுமதி அதிரடி ரத்து!!
சென்னையில் கொரோனா நோய்க்கு 19 நாள் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு ரூ16 லட்சம் பில் போட்டு ரூ. 12.20 லட்சத்தை கறந்த தனியார் மருத்துவமனையின் அனுமதியை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 17 லட்சத்தை எட்டியுள்ளது. இப்படி லட்சக்கணக்கில் இத்தொற்றுக்கு ஆளாவோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பது சவாலாக உள்ளது.
கொள்ளை லாபம்
அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கின. மேலும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் பார்ப்பதை தடுக்க கட்டணங்களையும் அரசே நிர்ணயித்தது.

அதன்படி லேசான தொற்று பாதிப்புக்கு ஆளானங்களிடம் நாள் ஒன்றுக்கு ரூ .5 ஆயிரம் முதல் 7 ஆயிரமும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை வழங்கினால் ரூ.15 ஆயிரம் எனவும் தமிழக அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால் இதை எந்த தனியார் மருத்துவமனையும் கடைப்பிடிக்காமல் இஷ்டத்துக்கு கொள்ளை லாபம் பார்ப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அதிலும் வசதி படைத்தவர்கள் காய்ச்சல் என்று தனியாரிடம் சென்றாலே கொரோனா பாசிடிவ் எனக் கூறி மருத்துவமனையில் சேர கட்டாயப்படுத்தி பணம் பிடுங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அடாவடி வசூல்
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல்(Be well) எனும் தனியார் மருத்துவமனையில், 19 நாட்கள் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு ரூ.16 லட்சத்துக்கு பில் போட்டு ரூ. 12. 20 லட்சம் அடாவடியாக வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு அரசு அளித்த அனுமதியை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது .
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குத் தேவையான நெறிமுறைகள், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வகையில் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் (Be well) மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12,20,000 வசூலிக்கப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது. மேலும், அரசு நெறி முறைப்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை.
அனுமதி ரத்து
கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பி வெல் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame






