சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை
சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
எட்டு வழி பசுமை வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நிலத்தை கையகப்படுத்த முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி அவசியமாக இருக்கவில்லை என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல், உள்ளிட்ட பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த வாதங்களை முன் வைத்துள்ளது.
அத்துடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தனியாக நடைமுறைகள் உள்ளதாகவும் வாதிட்டுள்ளது. எட்டு வழிச்சாலையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் அர்த்தமற்றவை என்று நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் என்பது குதிரையை விட்ட பிறகு லாயத்தை கூட்டுவது போன்றது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகிறார்.
இந்த வழக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 277 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த எட்டு வழி சாலை திட்டம் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியபோது பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 35 விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் என கூறி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.






