கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பொறியியல் படிப்பு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்வது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தேர்வுகள் ரத்தாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடிக்கிடக்கின்றன. மேலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான திறப்பு எப்போது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வியும் கொரோனாவால் கேள்விக்குறியாகி விட்டது.

 

கடந்த 4 மாதங்களாக அனைத்து கல்வி நிறுவஙை்களும் மூடப்பட்டதால் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் தமிழகத்தில் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்குமான ஆண்டு இறுதித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதில் இன்னும் குழப்பமான நிலை நிலவுகிறது. இதில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வும் இழுபறி என்பதால் அவர்கள் உயர்கல்வியை தொடர் வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்து மாற்று ஏற்பாடு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இறுதி செமஸ்டர் தேர்வு ரத்தாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது


Leave a Reply