கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. மாணவர்களை கவர்ந்திழுக்க தனியார் கல்லூரிகள் பலவும் போட்டி போட்டு விளம்பரம் செய்து வருகின்றன.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. இதைத் தொடர்ந்து கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக்குகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதன் காரணமாக கல்லூரிகள் திறப்பு எப்போது? முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்தது.
இதனால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை சார்பில் கடந்த வாரம் வழி காட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதன்படி இந்தாண்டு மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலமே நடத்த வேண்டும், ஜுலை 20-ந் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கலாம் எனவும் அறிவிப்பு வெளியானது.
ஆனால், அரசின் வழிகாட்டுதலை மீறி சில தனியார் கல்லூரிகள் கடந்த வாரத்தில் +2 தேர்வு முடிந்த மறுதினமே அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவங்களை கல்லூரிகளில் நேரடியாக வழங்க ஆரம்பித்தன. இதனால் மாணவர்கள், பெற்றோர் கல்லூரிகளில் குவிய, கொரோனா முன்னெச்சரிக்கை சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது. இதையறிந்ததும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வழங்க தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகம் தடை போட்டதுடன், 20-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்ப பதிவு என கண்டிப்பு காட்டியது.
அதன்படி இன்று (20-ந் தேதி) முதல் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக்குகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள்
www.tngasa.in
www.tndceonline.org
ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் .
இதே போல் அரசு பாலிடெக்னிக்குகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக
www.tngptc.in,
www.tngptc.com
ஆகிய இணைய தள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது +2 முடிவுகள் மட்டுமே வெளியாகி மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான சிறப்பு மையங்களையும் தமிழக அரசு அமைத்திருக்கிறது.
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியதால் மாணவர்களை கவர்ந்திழுக்க தனியார் கல்லூரிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தங்கள் கல்லூரிகளில் உள்ள பாட வகுப்புகள், வசதிகள், சலுகைகள் குறித்து கவர்ச்சிகர விளம்பரங்களை நாளிதழ்கள், சமூக வலைதளங்களில் பெரியளவில் வெளியிட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் பணிகளில் பல தனியார் கல்லூரிகள் ஈடுபட்டுள்ளன.