புதுச்சேரியில் ஆளுநர் – முதல்வர் மோதல் உச்சகட்டம் : ஆளுநர் அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பரபரப்பு!!

புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்த வராத நிலையிலும், பட்ஜெட்டுக்கும் அனுமதி வழங்காத நிலையிலும், முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ததால் உச்சகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

 

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-ல் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போது முதலே அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே முட்டல் மோதல் நிலைமை தான் நீடிக்கிறது. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு துணை நிலை ஆளுநருக்கான அதிகாரம் அதிகம். ஆளுநர் ஒப்புதலின்றி எந்தத் திட்டங்களும் செயல்படுத்த முடியாது.

 

இதனால் முதல்வர் நாராயணசாமி அனுப்பும் திட்டங்களுக்கு உடனே ஒப்புதல் வழங்காமல் ஏதேனும் காரணங்களைக் கூறி கிரண்பேடி திருப்பி அனுப்புவதால் இருவருக்குமிடையே எப்போதும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

 

இந்நிலையில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். ஆனால் பட்ஜெட்டிற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்கவில்லை. மேலும் கூட்டத்தொடரின் முதல் நாளில் நிகழ்த்த வேண்டிய ஆளுநர் உரையையும் வேறொரு நாளில் உரையாற்றுவதாக தெரிவித்து கிரண்பேடி எழுதிய கடிதத்தை முதல்வர் நாராயணசாமி ஏற்க மறுத்ததால் மீண்டும் மோதல் வெடித்தது.

 

பதிலுக்கு ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதல் வர் நாராயணசாமி,கொரோனா பாதிப்பு இருக்கும் இந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை செய்வதற்கு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என்று நம்புகிறேன். இல்லையெனில் புதுச்சேரி அரசும், மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று கூறியிருந்தார்.

 

ஆனால் ஆளுநர் கிரண்பேடியோ கடைசி வரை பிடிவாதம் காட்டினார். இதனால் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் கிரண்பேடி வரவில்லை. முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து , அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 15 நிமிடங்கள் வரை சபையில் காத்திருந்தனர். ஆனால் ஆளுநர் வராததால் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. சபை கூடியதும், ஆளுநர் கிரண்பேடி வராததால் ஆளுநர் உரையை நிறுத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

 

சர்ச்சை நீடிக்கிறது...

 

இதைத் தொடர்ந்து 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றாமலும், அவரின் ஒப்புதல் பெறாமலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதும் புதுச்சேரி வரலாற்றில் முதல் முறை என்பதால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் இதற்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்குவாரா ? மாட்டாரா? என்ற சர்ச்சையும் நீடிக்கிறது.

 


Leave a Reply