நாங்கள் பரிந்துரை செய்த பட்டியலில் ‘திரிஷா விஜய்’ இல்லை!
நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும் என எழுத்தாளர் அழகிய பெரியவன் தெரிவித்துள்ளார். கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ மையத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தி எழுதியிருந்தார்.
இதையடுத்து, தரம் குறைந்த புத்தகங்கள் வாங்கியது மட்டுமன்றி, நூல்களின் ஆசிரியர்கள் பெயர்களில் போலிப் பெயர்களைப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் மதிப்பில் அதிக விலைக்குப் புத்தகங்கள் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, இப்புத்தகக் கொள்முதலின் போது த்ரிஷா விஜய், சங்கீதா விஜய் உள்ளிட்ட விசித்திரமான பெயர்களைக் கொண்ட நூலாசிரியர்களின் பெயர்களில், அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் என்ற பதிப்பகங்களில் இருந்து புத்தகங்கள் வாங்கப்பட்டு நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பின.
இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்ததோடு, நியாமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்தநிலையில், பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் பரிந்துரை செய்யும் குழுவில் இருந்த எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இதுதொடர்பாக எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். ‘நூல்களைப்’ பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!
கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.
பிப்ரவரி, மார்ச் வரையிலும் கூட பரிந்துரை பணிகள் முடியவில்லை. ஏப்ரலில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். அப்படியானால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே பணத்தை எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அழகிய பெரியவன் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





