உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு!
புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்திட வேண்டுமென பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் விவகாரத்தில் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக எழுத்தாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத்தன்மையும், அறிவுப்பெறுமதியும் இல்லாத போலியான பல நூல்கள் இடம் பெற்றிருப்பதற்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.
சமூகத்தில் அறிவுப்பரவலுக்கான சீரிய வழியென நூலகத்தைக் கருதி 1948ஆம் ஆண்டு பொது நூலகச் சட்டத்தை இயற்றிய, 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்ககத்தை உருவாக்கிய முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், சிறப்புப் பகுதிநேர நூலகங்கள் என 4,755 நூலகங்கள் இயங்கிவருகின்றன.
இவற்றுக்கான நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதில் குளறுபடிகளோ முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வலியுறுத்திவந்த நிலையில், “வெளிப்படைத் தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” வெளியிடப்பட்டது. அப்போதிருந்து செயல்முறையிலிருக்கிற இந்தக் கொள்கைக்குட்பட்டே கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட சிறப்பு நூலகங்களுக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களின் மையநூலகங்களுக்கும் நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணை 2025 நவம்பர் 05 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த அரசாணையின்படி, புனைவு மற்றும் பொதுநூல்களைப் பரிந்துரை செய்வதற்காக எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட 137 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினரால் பரிந்துரைக்கப்படும் ஆயிரக்கணக்கான நூல்களிலிருந்து கொள்முதலுக்கான பட்டியலை இறுதிப்படுத்துகிறது 13 பேர் கொண்ட தேர்வுக்குழு. தேர்வுக்குழு இறுதிப்படுத்தும் பட்டியலிலுள்ள நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு அவற்றினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தாருடன் பேசி விலையை நிர்ணயிக்கிறது 5 பேர்கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக்குழு. இம்மூன்றுக் குழுக்களின் பரிந்துரைகளையும் கூராய்ந்து ஒப்புதல் வழங்குகிறது 5 பேர் கொண்ட உயராய்வுக்குழு.
இவ்வளவு சீரான பரிசீலனைகளின் நிறைவிலேயே நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதாக நாம் நம்பியிருந்த நிலையில், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் 2026 அக்டோபர் 17 அன்றும், ஓவியர் சுந்தரன் முருகேசன் 2026 அக்டோபர் 24 அன்றும் முகநூலில் எழுதிய பதிவுகளும், எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழொன்றில் 2026 நவம்பர் 6 அன்று எழுதிய கட்டுரையும் கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒருபகுதி போலியானவை என்கிற அறிவுலகமே அதிர்ந்துபோகிற தகவலைப் வெளிக்கொணர்ந்துள்ளன. இதன்படி, ‘அகல் விளக்கு’ என்கிற பதிப்பகத்திடமிருந்தும் அந்தப் பதிப்பகத்தின் முகவரியிலேயே இயங்குகின்ற பீனிக்ஸ் பப்ளிகேஷன் என்கிற மற்றொரு பதிப்பகத்திடமிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1800 முதல் 2000 நூல்கள் போலியானவை என்று முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன.
இவ்விரண்டு பதிப்பகங்களும் இணையவெளியில் கொட்டிக்கிடக்கும் பல்துறை சார்ந்த தரவுகளைத் திரட்டி அவற்றைப் போலியான எழுத்தாளர்களின் பெயரில் தப்பும் தவறுமாக வெளியிட்டுள்ளன. மட்டுமன்றி போலியான இந்நூல்களுக்கு கொடுக்கப்பட்ட விலையோ பொதுவாக இதேயளவு நூல்களுக்கு கொடுக்கப்படுவதை விடவும் பன்மடங்கு அதிகம். போலியான எழுத்தாளர்களைக் களமிறக்கியுள்ள இந்தக் முறைகேட்டினால் மெய்யான எழுத்தாளர்களின் ஆய்வாளர்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும் இது, அவர்களது பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்து பொதுவெளியிலிருந்து அவர்களை அகற்றுவதற்கொப்பானதொரு தீங்குமாகும். உண்மையினை கற்றுணர்வதற்கு வாசகர்களுக்கும் போட்டித்தேர்வர்களுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் உள்ள உரிமை, இந்தப் போலியான நூல்களில் மலிந்துள்ள பிழையான தகவல்கள் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. போலியான ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டதன் மூலம் பதிப்புத்துறையில் அர்ப்பணிப்புடன் ஊழியர்களும் இயங்கிவரும் பதிப்பகங்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றின் இதன் தொடர்ச்சியில், மாநிலத்தின் வேறுபல நூலகங்களிலும் இந்தப் பதிப்பகங்களின் போலி நூல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதேபோல வேறுபல பதிப்பகங்களும் இருப்பதாகவும், ஆங்கில நூல்களின் உண்மைத்தன்மையும் சந்தேகத்திற்குரியவையே என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அறிவுச்சேகரமான நூலகங்களைப் பாதுகாக்கவும், நூலகங்களுக்குள் அதற்கிசைவான நூல்கள் மட்டுமே இருப்பதை உறுதிசெய்வதற்கு பொது நூலக இயக்ககமும் தமிழ்நாடு அரசும் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இதன்பொருட்டு, நூலகத்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என்பதாகக் குறுக்கிவிடாமல் தமிழ்ச்சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயலாகக் கருதித் தண்டிக்க வேண்டும். அதனிமித்தம் இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள போலியான நூல்களைக் கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் பரிந்துரை செய்தவர்கள், தேர்வு செய்தவர்கள், தொகை விடுவித்தவர்கள் பற்றிய விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றிய உண்மைத் தகவலை வெளியிட வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




