தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, முதல் முறையாக ஒரே நாளில் பாதிப்பு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. இன்று மட்டும் 78 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோணா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக பட்சமாக நமது மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் தினமும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகி வருகிறது என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாள் பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி 4979 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக திருவள்ளுரில் 405 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், விருதுநகரில் 265 பேருக்கும், மதுரையில் 205 பேருக்கும் என அதிகபட்ச தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.