தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொற்று பாதிப்புக்கு ஆளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மட்டும் 15 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு அரசியல்வாதிகளும் தப்பவில்லை. அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கொரோனா தொற்று பாதிப்பால் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் அரசியல்வாதிகள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மேலும் அதிர்ச்சியாக ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வும்,கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, திமுக பொறுப்பாளருமான செங்குட்டுவன், காய்ச்சல் காரணமாக ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உள்ளது இன்று உறுதியானது.
மேலும் வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆர்.காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.