வேலைக்காக அபுதாபி சென்றவர் கொரொனாவால் மரணம்! முகத்தை கூட பார்க்க முடியாததால் உறவினர்கள் கதறல்!
குடும்ப வறுமையை போக்க அபுதாபிக்கு கூலி வேலைக்காக சென்றவர் கொரொனா பாதிப்பால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் தோபா தண்டியை சேர்ந்த கொண்டையா குடும்ப வறுமையைப் போக்க அபுதாபிக்கு வேலைக்கு சென்றார்.
கொரோனா பேரிடரால் மூன்று மாதங்களாக வேலையின்றி தவித்து வந்த கொண்டையா அங்குள்ள அரசு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்று உறுதியான கொண்டையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சி செய்தும் கொரொனா அச்சம் காரணமாக சடலத்தை அனுப்பி வைக்க அபுதாபி போலீஸ் மறுத்துவிட்டது.
இதையடுத்து கொண்டையாவின் உடல் தன்னார்வலர்களால் அபுதாபியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்ப வறுமையைப் போக்க வெளிநாட்டிற்கு சென்று கொரோனாவுக்கு பலியான கொண்டையாவின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாதது உறவினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.






