11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? எனக் கேள்வி
ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் செயல்படாமல் உள்ளார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதாக கூறி சபாநாயகரிடம் தெரிவித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதில் சென்னை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகர் முடிவில் தங்களால் தலையிட முடியாது என்றும் சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி கடந்த பிப்ரவரி மாதம் வழக்கை முடித்து வைத்தது.

மேலும் மூன்று வருடம் காலதாமதம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று தாங்கள் நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் பிறகும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்காததை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி தற்போது கொரோனா பரவி வரும் காலம் இந்த நேரத்தில் எப்படி சபாநாயகரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
வழக்கின் விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் இத்தனை நாட்களாக சபாநாயகர் ஏன் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் இருந்துள்ளார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவரை இப்போதாவது நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள் என்று சபாநாயகர் தனபால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.






