திருடு போன ” பைக் ” கொரியரில் திருப்பி வந்த நிகழ்வு.பைக் உரிமையாளர் இன்ப அதிர்ச்சி !!!
கோவை அருகே திருடு போன ” பைக் ” கொரியரில் திருப்பி வந்ததால் வாகன உரிமையாளர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ள நிகழ்வு கோவையில் நிகழ்ந்துள்ளது.கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் லேத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருடு போனது.
இதுதொடர்பாக சுரேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றும் பிரசாந்த் என்பவர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று கொரியர் அலுவலகத்தில் இருந்து கொரியர் வந்திருப்பதாக சுரேசுக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து கொரியர் அலுவலகம் சென்று பார்த்த போது தனது இரு சக்கர வாகனம் கொரியரில் வந்திருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

பிரசாந்த் மயிலாடுதுறையில் இருந்து சுரேசுக்கு இரு சக்கர வாகனத்தை கொரியர் அனுப்பியுள்ளார்.சொந்த ஊர் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்று திருப்பி அனுப்பினாரா ? அல்லது காவல் துறை நடவடிக்கைகளுக்கு பயந்து திருப்பி அனுப்பினாரா ? என்பது குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






