தம்பி மனைவியிடம் சோறு போட சொல்லி தகராறில் ஈடுபட்ட அண்ணன் கொலை!
மதுபோதையில் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டு சண்டை போட்ட அண்ணனை தம்பியே கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளான். திருச்சியில் அமனைவியை பிரிந்து வாழ்ந்த மாரிமுத்து, தம்பி மனைவியிடம் சோறு போடச் சொல்லி தகராறு செய்துள்ளார். அதுவே அவருக்கு எமனாக மாறியது. தம்பி அண்ணனை கொலை செய்தது ஏன்?
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிகண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் 40 வயதான மாரிமுத்து மற்றும் 35 வயதான காட்டு ராஜா சகோதரர்கள். இவர்களில் கூலி வேலை பார்த்து வந்த மாரிமுத்து தனது மனைவியை பிரிந்து தம்பி காட்டு ராஜாவுடன் வசித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு வந்த மாரிமுத்து தம்பியின் மனைவி சுமதியிடம் சோறு போடச் சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கே கிடந்த முழு குச்சியை எடுத்து தம்பி மனைவியை அடித்துள்ளார்.
இதுகுறித்து சுமதி தனது கணவர் காற்று ராஜாவிடம் கூறவே அவர் ஆத்திரமடைந்தார். விட்டுப் பிடிக்கலாம் என காத்திருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வீட்டிற்கு மதுபோதையில் வந்த மாரிமுத்து சுமதியிடம் சோறு போடும் படி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய தன் கணவரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். ஏற்கனவே முள் குச்சியால் அடித்த சம்பவமும் அவரது நினைவிற்கு வர ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற காட்டு ராஜா அண்ணன் மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
தகவலறிந்த ராம்ஜி நகர் போலீசார் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டு ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






