முன்னணி தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கம்
வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் மைக்கேல் சோக்சி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் வாங்கிய சுமார் 68,000 கோடி கடன்கள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வரை வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழில் அதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்தது. அதன்படி வழங்கப்பட்டிருந்த விவரத்தில் வைர வியாபாரி மெகல் சோக்சிக்கு சொந்தமான 3 நிறுவனங்கள் மூலம்8 ஆயிரத்து 48 கோடி ரூபாய் கடன்களும் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதேபோல் மோசடி தொழிலதிபரான விஜய் மல்லையாவுக்கு சொந்தமான விமான நிறுவனம் பெற்ற 1,943 கோடி ரூபாய் கடன் கணக்கில் ரீதியாக நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஜுன்ஜுன்வாலா, விக்ரம் கோத்தாரி வாங்கிய கடன்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தொகை நீக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கணக்கீடு ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாக கடன்களை தள்ளுபடி செய்வது அல்ல என்றும் கடனை வசூலிக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.






