ரூ.68,000 கோடி கடன் தள்ளுபடி தொடர்பாக ராகுல் தவறான தகவல்களை தருகிறார்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கடன் தள்ளுபடி விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நாட்டிற்கு தவறான வழிகாட்டுதலை காங்கிரஸ் அளித்து வருவதாக அந்த கட்சியின் மீது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். பெரும் கோடீஸ்வரர்களுக்கான 68,000 கோடி ரூபாய்க்கான கடனை அரசு தள்ளுபடி செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

 

மேலும் அதிக கடன் நிலுவை வைத்துள்ள 50 பணக்காரர்கள் பட்டியலை ஆளுங்கட்சி வெளியிட தயங்குவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் நிதி கட்டமைப்பு ஒழுங்குபடுத்தும் பணியில் அரசு முனைப்பாக இருப்பதாகவும் ஆனால் இதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை என்று நிதியமைச்சர் விமர்சித்தார்.

 

ரைட் ஆப் என்ற வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கை என்றும் தள்ளுபடி என அறிவிக்கப்பட்ட கடன் வராக்கடன் பிரிவில் சேர்க்கப்பட்டு அதை வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கினார். தற்போது அதிகக் கடன் வைத்துள்ளவர்கள் பட்டியலில் உள்ள பலர் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முறைகேடாக பலன் பெற்றவர்கள் தான் என்றும், அந்த ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதற்கிடையில் கடன் தள்ளுபடி விவகாரத்தில் சிதம்பரத்திடம் ராகுல்காந்தி விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் கூறியுள்ளார். ரைட் ஆஃப் என்ற பெயரில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை வழக்கமான கணக்கு பதிவியல் நடவடிக்கை என்றும், இதனால் கடனாளிகளிடம் இருந்து பணம் வசூலிக்கும் பணி எவ்விதத்திலும் தடையாகாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

ரைட்டிங் ஆப் மற்றும் வேமிங்க் ஆஃப் என்ற இரு நடவடிக்கைகளில் இடையே உள்ள வித்தியாசத்தை முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரத்திடம் ராகுல் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என்றும் ஜவடேகர் அறிவுறுத்தினார்.


Leave a Reply