அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை மூடிய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கில் நேற்று அமலான புதிய நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பல இடங்களில் கடைகளை மூடினர். கடை ஊழியர்களுக்கும், மதுகுடிப்போருக்கும் பல இடங்களில் தகராறு ஏற்பட்டது.மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மற்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது வாங்கினால் UPI மூலம் மட்டுமே தொகையை செலுத்தும் நடைமுறை நேற்று அமலாகின.
முதல் நாளில் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை, பாட்டில்களை திரும்பப் பெறும்போது ஸ்கேன் செய்யும் ஸ்கேனர்கள் முறையாக செயல்படவில்லை என பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இதனால் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்த கூடாது என வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். நெல்லையில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனியில் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் 220 கடைகள் திறக்கப்படவில்லை… நீலகிரியில் 49 கடைகள் மூடப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை.ஊழியர்களின் போராட்டத்தால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், மதுபானம் வாங்க வந்தவர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
கோவை மசக்காளிபாளையத்தில் கடை திறக்கப்படாததை கண்டித்து மதுஅருந்துவோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் காலி பாட்டில்களை ஸ்கேன் செய்ய முடியாததால் அவற்றை திரும்பப் பெற ஊழியர்கள் மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மதுஅருந்துவோர் காலி பாட்டில்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் அருகே கும்மிப்பேட்டையில் டாஸ்மாக் கடை மீது மதுபாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் அருகே கலியானூர் டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்க வந்தவர்களும், மதுபானம் வாங்க வந்தவர்களும் ஒரே வரிசையில் அனுமதிக்கப்பட்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருபுறம் கடைகள் அடைக்கப்பட்டதால் மதுபானம் வாங்க முடியாமல் பலர் ஏமாற்றமுற்ற நிலையில்… திறக்கப்பட்டிருந்த கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை மூடிய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அமைச்சர் விக்னேஷ், மதுபான கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றார். இதையடுத்து, அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை அடைத்த 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் விக்னேஷ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,040 சில்லறை விற்பனை கடைகளில் 460 கடைகள் மட்டுமே மூடப்பட்டதாகவும் அரசின் உத்தரவை மீறி கடையை மூடியவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறைகேடாக சென்ற பணத்தை சீரமைக்கவே எம்.ஆர்.பி. விலையில் 10 ரூபாய் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அரசின் முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





