தனியாக இருக்கும் தனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை – ராணுவ வீரர் முதல்வருக்கு ட்வீட்.உடனடி ” ஆக்‌ஷனில் ” இறங்கி உதவி செய்த எடப்பாடி !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1596 இல் இருந்து 1629 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.உள்ளாட்சிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டு அரசு இயந்திரம் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

 

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி,காய்கறிகள்,மளிகை பொருட்களும் வீடு வீடாக அரசு அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,தேவை ஏற்படுபவர்கள் அரசுக்கு தகவல் தெரிவித்தாலும் உடனடியாக உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கில் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.தனது கணக்கிற்கு உதவி தேவைப்படுவோர் அணுகினாலும் அதனை அரசு அதிகாரிகள் மூலமும் செய்து தரவும் தயங்கியதில்லை.

இந்த நிலையில் தற்போது புதியதாக பிரிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ரவிக்குமார் என்பவர் தமிழக முதல்வரின் ட்வீட்டர் கணக்கில் ஒரு ட்வீட் செய்தார்.அதில் ” ஐயா.நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன்.எனது 89 வயது தாயார் வீட்டில் தனியாக உள்ளார்.உடல்நிலை சரியில்லை.எனக்கு தந்தையும் இல்லை,சகோதரனும் இல்லை.எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை ” என குறிப்பிட்டிருந்தார்.

 

ராணுவ வீரரின் இந்த ட்வீட்டை கண்டு உடனடியாக ” ஆக்‌ஷனில் ” இறங்கிய தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரிகளின் மூலம் ராணுவ வீரரின் தேவையான மருத்துவ உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.அதிகாரிகளும் உடனடியாக செயல்பட்டு ராணுவ வீரரின் தாயாருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்துள்ளனர்.

இது குறித்து தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ராணுவ வீரருக்கு பதிலளிக்கும் விதமாக ” தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மேலும்,அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ,இருமலோ,மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் இல்லை.நலமாக உள்ளார்.தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள் ” என நம்பிக்கையூட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.

 

வெளிமாநிலத்தில் பணியில் இருக்கும் ராணுவ வீரரின் கோரிக்கைக்கு உடனடி ” ஆக்‌ஷனில் ” இறங்கி மருத்துவ உதவிகள் செய்த தமிழக முதல்வருக்கு ட்வீட்டரில் பல தரப்பட்ட மக்களும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.


Leave a Reply