மே 3 க்குள் கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என கோவையில் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை துவக்கி வைத்த பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி !!!
கொரோனா அறிகுறியை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை நடத்துவது தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் நகரங்களில் இன்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இது வரை 1323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகப்படுத்துவதும், துரிதப்படுத்துவமே முக்கியம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கான கருவிகள் இல்லாததால், பி.சி.ஆர் கருவிகள் மூலம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இதுவரை பரிசோதனை நடத்தப் பட்டு வந்தது. இதில் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தமிழகம் வந்து சேர்ந்த நிலையில், முதற் கட்டமாக சென்னை, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இன்று முதல் பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.இந்த ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா என்பதை 15 முதல் 30 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும் என்பதால், இன்று முதல் கூடுதல் நபர்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் கோவையில் உள்ள ஹாட்ஸ் பாட் பகுதியிலிருந்து அழைத்து வந்த 5 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.இந்த பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.சோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது.

பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்க கூடாது என்றும், விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் நிவாரண நிதியாக கோவையில் மட்டும் 11 கோடி பெறப்பட்டுள்ளதாகவும்,
கொரோனா தொடர்பாக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கோவையில் மட்டும் 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,
கடந்த நான்கு நாட்களில் 2075 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,ஏற்கனவே 7 கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுவதாகவும், தற்போது கோவைக்கு வந்துள்ள 2000 ரேபிட் கிட் மூலமும் பரிசோதனை தொடரும் என்றும் தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
முதல் கட்டமாக மட்டுமே 2000 ரேபிட் கிட் வந்துள்ளது. தொடர்ந்து அதிகப்படியான கிட் கோவைக்கு வந்து சேரும் என்றும் தெரிவித்தார். வருகின்ற 3 ஆம் தேதிக்குள் கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது பி.ஆர்.ஜி.அருண்குமார்,கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






