கொரோனா நிவாரணத்துக்கு தடை : ஏழைக்கு உதவுபவன் கைகளை அரசே தட்டி விடுவதா? கமலஹாசன் காட்டம்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா நிவாரண உதவிகளை தனியார் யாரும் தன்னிச்சையாக வழங்க தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு, ஏழைக்கு உதவுபவன் கைகளை அரசே தட்டி விடுவதா? என்றும், வேலை தெரிந்த ஆட்சியாளர்களை வேலை செய்ய விடுங்கள் அமைச்சர்காள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வேலை இழந்து, வருவாய் இன்றி தத்தளிக்கும் ஏழை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் போட்டி போட்டு வழங்கி வருகின்றனர். இப்படி தன்னிச்சையாக நிவாரணம் வழங்குவதால் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, யாரும் நேரடியாக நிவாரணம் வழங்கக் கூடாது என தமிழக அரசு திடீரென தடை விதித்துள்ளது. அத்துடன் இந்த உத்தரவை மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசு தானும் செய்யாது; செய்பவர்களையும் தடுப்பது சர்வாதிகாரத்தனம் என கண்டனம் தெரிவித்திருந்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தமிழக அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்த உத்தரவு உடனே வாபஸ் பெற வேண்டும். தனியார் நிவாரணம் வழங்கினால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க காவல் துறையை பயன்படுத்த வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தி இருந்தார்.

 

தமிழக அரசின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளதாவது: அண்டை மாநிலங்கள் சில கோவிட் 19 உடன் போராட இளைஞர்கள், தனியார், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப் பலரின் உதவியை நாடிப் பெறுகிறது. என் அரசோ ஏழைக்கு உதவி செய்பவன் கைகளை தட்டு விடுகிறது. வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர் காள். This is no time for commission or omission. People are watching என கமல் கடுமையாக சாடியுள்ளார்.


Leave a Reply