கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சம் வழங்கிய கோவை கலெக்டர் !!!
கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் மாநிலத்தில் துவங்கி உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வருகிறது.இந்நோயின் தாக்குதலினால் உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தாக்குதலுக்கு இந்தியாவும் தப்பவில்லை.7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இந்நோயின் தாக்குதல் மிகவும் குறைவு.இதற்கு மத்திய அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளே முக்கிய காரணம்.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
48 பேரில் 42 பேர் டெல்லி சமுதாய மாநாட்டில் பங்கேற்ற ஓரே குழுவினர் எனவும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 பேராக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று தேனியில் 16 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும், திருச்சியில் 6 பேருக்கும், நாமக்கல்லில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழக அரசும் இவ்வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.இதனையடுத்து தொழிலதிபர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள்,தனியார் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று வரை ( 08-04-2020 ) 60 பேர் ரூ.6.40 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் ” சிறு துளி பெரு வெள்ளம் ” என்பதற்கேற்ப கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி அவர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோசோலையினை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் வழங்கியுள்ளார்.






