குஜராத் நெடுஞ்சாலையில் 51 கி.மீ நிர்வாண நடை..!
குஜராத்தில் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வந்த ராஜ்குமார் ஜாட் (23) என்ற இளைஞரின் மர்ம மரண வழக்கில், 21 இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள், ஆடைகளை அவிழ்த்துவிட்டு அவர் தனியாக நடந்த வீடியோ மற்றும் மாயமான உடைகள் எனப் பல மர்ம முடிச்சுகளுடன் குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் அவரது மரணத்திற்கான முக்கியக் காரணங்கள் இன்னும் விடை தெரியாமல் உள்ள நிலையில், மாநில அரசின் அறிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஜாட், கடந்த 2025 மார்ச் 2 அன்று மாயமானார். மார்ச் 9 அன்று, அவர் கடைசியாக காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 51 கி.மீ தொலைவில் உள்ள ராஜ்கோட் – அகமதாபாத் நெடுஞ்சாலையில் தர்காதியா மேம்பாலம் அருகே அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. நெடுஞ்சாலையில் சென்ற சொகுசுப் பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறி, போலீஸார் இதனை ஒரு சாலை விபத்து வழக்காகப் பதிவு செய்தனர்.
ஆனால், தனது மகன் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவரது தந்தை ரத்தன்லால் ஜாட், வழக்கை சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், உள்ளூர் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராஜ் சிங் ஜடேஜா மற்றும் அவரது மகன் கணேஷ் கோண்டல் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி எம்.ஆர். மெங்டே முன்னிலையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஹர்திக் தவே தாக்கல் செய்த அறிக்கையில், ராஜ்குமார் ஜாட் சாலையில் நடப்பதற்கு முன், தனது உள்ளாடைகளைக் கழற்றி எறியும் வீடியோ ஒன்று நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. மேலும், அவரது செல்போனிலும் இதே போன்ற நடத்தை கொண்ட பல வீடியோக்கள் இருந்ததாகவும், அவர் ஏதேனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கலாமா என்பதை அறிய மனோதத்துவ நிபுணர்களின் கருத்தை கோரியுள்ளதாகவும் அரசு தெரிவித்தது. எனினும், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டது.
அவர் காணாமல் போன இடத்திலிருந்து உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் வரையிலான வழித்தடத்தில் உள்ள 21 இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்களில், அவர் தனியாக நடந்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. 11 மணி நேரம் 29 நிமிடங்களில் ஒருவரால் 51 கி.மீ தூரத்தைக் கடக்க முடியுமா என்ற கேள்விக்கு, மணிக்குச் சராசரியாக 4.4 கி.மீ வேகத்தில் விறுவிறுப்பாக நடந்தால் இந்த தூரத்தைக் கடப்பது சாத்தியமே என்று நிபுணர் கணிப்பை மேற்கோள் காட்டி அரசு வாதிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




