பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். படிப்புகளால் வேலைவாய்ப்பு குறைவு..!
இந்தியாவில் தேசிய வேலையின்மை விகிதம் 3.2%-ஆக உள்ள நிலையில், படித்த பட்டதாரிகளிடையே வேலையின்மை 13%-ஆகவும், பெண்களிடையே 20.4%-ஆகவும் மிக உயர்ந்துள்ளது என நிதி ஆயோக் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் திறன் மேம்பாட்டு கட்டமைப்பை மாற்றியமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தேசிய சராசரியை விடப் பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளதாக நிதி ஆயோக் கவலை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நேரடி வேலை வாய்ப்புகளைத் தராத பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். போன்ற வழக்கமான பொதுப் பட்டப் படிப்புகளை அதிகளவில் சார்ந்திருப்பதே சிக்கலுக்கு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. பசுமைத் தொழில்கள் (Green Industries), மின்சார வாகனங்கள் (EV) போன்ற அதிவேக வளர்ச்சி பெறும் துறைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புடன் கூடிய சிறப்புப் படிப்புகளுக்கும், தொழிற்பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் 90%-க்கும் அதிகமான பட்டதாரிகள் தங்களது கல்வித் தகுதிக்குத் தொடர்பில்லாத பணிகளிலேயே பணியாற்றுகின்றனர்.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ‘விக்சித் பாரதத்திற்கான திறன் மேம்பாட்டை மறுவடிவமைத்தல்’ (Reimagining Skilling for Viksit Bharat) என்ற அறிக்கையில், இந்தியாவின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறையில், வகுப்பறைகளில் கற்பிக்கப்படுவதற்கும் தொழில்துறையின் தேவைக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் பழமையானதாகவும், தொழில் துறையின் தேவைகளுக்குப் பொருந்தாத வகையிலும் உள்ளன. இதனால் பெறப்படும் பட்டங்களும் சான்றிதழ்களும் வேலைவாய்ப்புகளாக மாறுவதில்லை. பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 தரவுகளை மேற்கோள் காட்டி, வெறும் 8.25% பட்டதாரிகள் மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற பணிகளில் உள்ளனர் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
தேசியவேலையின்மை விகிதம் 3.2%ஆக உள்ள நிலையில் படித்த பட்டதாரிகளிடையே வேலையின்மை 13%ஆகவும் பெண் பட்டதாரிகளிடையே 20.4%-ஆகவும் மிக உயர்ந்துள்ளது. இளங்கலை படிப்புகளில் சேர்ந்துள்ள 3.4 கோடி மாணவர்களில், 1.13 கோடி பேர் பி.ஏ. படிப்பிலும், பி.ஏ., பி.எஸ்சி, பி.காம். ஆகிய 3 படிப்புகளிலும் சேர்த்து 2 கோடிக்கும் அதிகமானோரும் பயில்கின்றனர். மேலும், 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 8.7 கோடி பேர் (தொழிலாளர் படையில் சேராத மக்கள் தொகையில் 11%) கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியில் ஈடுபடாதவர்களாக (NEET – Not in Education, Employment or Training) உள்ளனர். எனினும், இவர்கள் வேலைதேடாத பிரிவினர் என்பதால், நேரடியாக வேலையில்லாதோர் பட்டியலில் சேர்க்க முடியாது என நிதி ஆயோக் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அளித்த பேட்டியிலும், நமது கல்வி முறை சான்றிதழ்களையும் பட்டங்களையும் கொண்ட இளைஞர்களை உருவாக்குகிறது; ஆனால் அவர்களால் ஒரு பணியாளராகச் செயல்படவோ அல்லது புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கவோ போதுமான தயார்நிலை இல்லை. இதை நாம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை’ (State of Working India) அறிக்கையின்படி, 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 1983-ல் 35%-ஆக இருந்து 2023-ல் 39%-ஆக உயர்ந்துள்ளது.
25 முதல் 29 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடையே இது 12%-லிருந்து 20%-ஆக அதிகரித்துள்ளது. தொழிற்கல்வி மற்றும் ஐடிஐ (ITI), டிப்ளமோ படிப்புகள் மீது சமூகத்தில் நிலவும் தவறான கண்ணோட்டம், இளைஞர்கள் தொழில்நுட்பப் பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கிறது. பெற்றோர்களும் மாணவர்களும் இவற்றைத் ‘இரண்டாம் தரப் பாதையாகவே’ கருதுகின்றனர்.
திறமை மற்றும் ஆர்வத்தை விட, தேர்வு மதிப்பெண்கள் மற்றும் குடும்ப நிர்ப்பந்தங்களே ஒருவரின் கல்விப் பாதையைத் தீர்மானிக்கின்றன. அத்துடன் விழிப்புணர்வு இல்லாமையும் இதற்கு முக்கியக் காரணமாகும். சரியான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் 47% பெண்களும், 43% இளைஞர்களும், 36% உயர்கல்வி மாணவர்களும் திறன் பயிற்சிகளில் சேருவதில்லை.
போஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) ஆய்வின்படி வழக்கமான பட்டப்படிப்பை மட்டும் முடித்தவருக்குத் தொடக்க மாத ஊதியம் சராசரியாக ரூ.22,000 (ஆண்டு வளர்ச்சி 3.2%). சிறப்புத் திறன் பயிற்சியுடன் பட்டப்படிப்பை முடித்தவருக்குத் தொடக்க மாத ஊதியம் ரூ.29,000. தொடக்கத்தில் ஏற்படும் இந்த ரூ.7,000 ஊதிய வித்தியாசம், 10 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.9.7 லட்சம் வருமான இழப்பாக மாறுகிறது.
தற்போதுள்ள பல திறன் மேம்பாட்டு திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலை பெற்றுத் தருவது அல்லது அவர்களின் வருமானத்தை உயர்த்துவதை விட, சேர்க்கை மற்றும் பயிற்சியை முடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY), தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்ய யோஜனா (DDU-GKY), பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் போன்ற அரசுத் திட்டங்கள் குறித்து அடித்தட்டு மக்களிடம் போதிய விழிப்புணர்வு சென்றடைவதில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




