மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் டிஸ்சார்ஜ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


விழுப்புரத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் அரசு மருத்துவமனையில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் தவறுதலாக விடுவிக்கப்பட்டனர். மூன்று பேரும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் டெல்லியை சேர்ந்த மற்றொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

டெல்லியை சேர்ந்த 35 வயது நபர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகளின் முதற்கட்ட முடிவில் தொற்று இல்லை என வந்ததால் நான்குபேரும் விடுவிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

 

இரண்டாவது கட்ட பரிசோதனை முடிவில் அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக இரண்டு கட்ட பரிசோதனை முடிவுகளில் நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை என்றால் தான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் முதற்கட்ட சோதனை முடிவை வைத்து விழுப்புரம் மருத்துவமனை நிர்வாகம் 4 பேரை விடுவித்தது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி நபரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. கார் திருட்டு வழக்கில் புதுச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த மாதம் 16ம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார்.

 

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் சுற்றித் திரிந்த அவர் மூன்று தினங்களுக்கு முன்பு கொரொனா அறிகுறியுடன் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரை தேடப்படும் நபராக விழுப்புரம் மாவட்ட மக்கள் தொடர்பு துறை அறிவித்தனர்.


Leave a Reply