திருப்பூரில் பகுதி வாரியாக காய்கறி சந்தைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்..! மார்க்சிஸ்ட் கட்சி யோசனை!!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


திருப்பூரில் காலை நேர காய்கறிச் சந்தைகளில் மக்கள் அதிகளவில் கூடுவதைக் கட்டுப்படுத்த பகுதிவாரி சந்தைகளை அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

 

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் திங்களன்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாவட்டம் முழுவதும் உள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு மாதத்திற்கான சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக தினக்கூலிகள், டிபிசி பணியாளர்கள், ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஊதியத்தை வழங்க வேண்டும்.

 

கடும் வெயில் காலமாகவும், பணி கடுமையானதாகவும் இருப்பதால் துப்புரவுப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு கொடுத்து பணிகளைப் பயன்படுத்த வேண்டும், துப்புரவுப் பணியாளர்களை அவர்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து அதிகாலை நேரத்தில் சிறிய வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் அடைத்து அழைத்து வருவது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மாறானதாக உள்ளது. எனவே அரசுப் பேருந்து, தனியார் பேருந்து அல்லது வேன்கள் மூலம் போதிய இடைவெளிவிட்டு உட்காரும் வகையில் ஏற்பாடு செய்து அவர்களை அழைத்து வர வேண்டும்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள், எண்ணிக்கை குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்திருப்பதுடன், எங்களுக்கு கிடைத்த விபரங்களையும் தொகுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளோம். அவர்களுக்கு ஆரம்ப கட்ட உதவிப் பொருட்களை வழங்கியுள்ளோம். இனி தொடர்ந்து அவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கிட வேண்டும். அவர்களது இருப்பிடங்களில் குடிநீர் விநியோகம், சோப்பு ஆகியவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும்.

 

காலை நேர காய்கறிச் சந்தைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவது தொடர்கிறது. எனவே பகுதி வாரியாக காலை நேர சந்தைகளை அனுமதித்தால் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்தி பரவலாக்க முடியும். அதுவரை வடக்குப் பகுதியில் புஷ்பா ரவுண்டானா, வளர்மதி வளாகம், அனுப்பர்பாளையம், காங்கேயம் சாலை, ஊத்துக்குளி சாலைகளில் பொருத்தமான மையங்களில் சந்தைகளைத் திட்டமிடலாம்.

 

சாலைகள், பொது இடங்களில் வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தொண்டர்களை அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Leave a Reply