ஊரடங்கால் முடங்கிய தெருக்கள்…! கால்நடைகள், நாய், குரங்கு, காக்கைகளுக்கும் உணவுப் பஞ்சம்…! பட்டினியால் பரிதாபம்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangements


ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க, 70 சதவீத கால்நடைகள், நாய்கள், காக்கை, குரங்குகளும் உணவு கிடைக்காமல் பட்டினியில் அல்லாடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ஒட்டு மொத்த உலகமே அதிர்ச்சியில் உறைந்து மக்களை வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. இந்தியா போன்ற ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுளளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினசரி வருவாய் ஈட்டி, அன்றாட வயிற்றுப் பிழைப்பை நடத்தியவர்கள் பாடு படுதிண்டாட்டமாகியுள்ளது. இதனால் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளதால் ஓரளவு நிம்மதியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஊரடங்கால், மனிதனை சார்ந்து வாழும் ஐந்தறிவு படைத்த ஜீவன்களும் உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தும் உணவு கழிவுகள் அதிகம் தெருவெளியில் கொட்டப்படாததாலும், உணவகங்கள் பூட்டப்பட்டுள்ளதாலும் தெருவோர நாய்கள், கிராமங்களை அண்டி வாழும் காக்கைகள் போதிய உணவின்றி தவிக்கின்றன.

 

அதிலும் காக்கைகள், கடந்த பல ஆண்டுகளாக பள்ளிகளின் சத்துணவுக் கூடங்களை நோக்கி சரியாக 12 மணிக்கு படையெடுத்து விடுவது வழக்கம். ஆனால் பள்ளிகளும் மூடப்பட்டு சத்துணவுக் கூடங்களும் அடைக்கப்பட்டதால் காக்கைகள் பாடு படுதிண்டாட்டமாகி உணவு தேடி அலைகின்றன.

 

இதில் கோயில்கள், சுற்றுலா இடங்களை சார்ந்து ருசியான உணவு,பழங்களை மக்களிடம் இருந்து வலுகட்டாயமாக தட்டிப் பறித்து உண்டு கொழுத்த குரங்குகள் கொலைப் பட்டினி கிடந்து தவிக்கின்றன. காலம் காலமாக கோயில் பகுதியிலும், சுற்றுலா இடங்களிலுமே சுற்றி வந்து பழக்கப்பட்டு விட்ட இந்த குரங்குகள் காடுகளுக்குள் சென்று சுயமாக இரை தேடும் பழக்கம் அறியாதவை. இப்போது கோயில்களும், சுற்றுலா இடங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்க, இந்த குரங்குகளும் உணவுக்காக பரிதவிக்கின்றன.

இப்படி, கடந்த ஒரு வாரத்திற்குள், இப்படிப்பட்ட விலங்குகள், பறவைகளுக்கு கிடைக்கும் உணவில் 70% குறைந்து விட்டதாகவும், அவற்றுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதனால் மனிதனை சார்ந்து வாழும் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

உள்நாட்டில் வாழும் ஜீவன்கள் பாடு இப்படி என்றால், மனித நடமாட்டம் குறைந்து, வாகனப் போக்குவரத்தும் முடங்கியதால், வனங்களில் வாழும் மிருகங்களோ படு படு சுதந்திரமாக சாலைகளில் ஜாலியாக உலா வருகின்றன. திருப்பதி திருமலை கோயில் அடைக்கப்பட்டதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு மலைப்பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மான்களும் பிற காட்டு விலங்குகளும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக உலா வருவதையும் காண முடிகிறது.


Leave a Reply