கொரானோ வைரஸ் குறித்து மக்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே..? பிரதமர் மோடி கவலை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரானோவின் தீவிரத்தை மக்கள் இன்னும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதது கவலையளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்தியாவில் இதன் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று 400-க்கும் அதிகமாகியுள்ளது. இதற்கு பலியானோரின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது.

 

இதனால் இந்தியாவில் அடுத்த சில தினங்களுக்கு கொரானோ வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கும் என்பதையறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதனை எச்சரிக்கையாக மக்களுக்கு உணர்த்தும் வகையில், கொரானோ பாதிப்பு நம்மை ஒன்றும் செய்து விடாது என நினைத்து விடக் கூடாது; விழிப்புடன் இருங்கள் என நாட்டுக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, வீட்டை விட்டு வெளியே நடமாடுவதை தவிருங்கள் என்றார். மேலும் பரீட்சார்த்தமாக ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடியுங்கள் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதனால், நேற்று முழுவதும் ஒட்டு மொத்த இந்தியாவும் வெறிச்சோடி, மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அத்துடன் பிரதமர் அழைப்பு விட்டதின் பேரில், நேற்று மாலை 5 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகள் முன் நின்றபடி, கொரானோ ஒழிப்பு பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவோருக்கு கை தட்டியும், மணியோசை எழுப்பியும் தங்கள் அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தினர்.

 

நாட்டு மக்கள் இப்படி மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக்கியதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, கொரானா பற்றிய முழு எச்சரிக்கை உணர்வு பெரும்பாலான மக்களிடம் இன்னும் இல்லை என கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் கூறுகையில், கொரானோ நிலைமையை இன்னும் நிறைய மக்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற நீங்கள் வீட்டில் இருப்பது அவசியம். மக்கள் அனைவரும் அரசின் அறிவுரைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் . இது தொடர்பான மத்திய அரசின் அறிவுரைகளையும், விதிகளையும் மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply