“ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு எதிரொலி!!” தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வலியுறுத்தி, இன்று திமுக.,காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். இதனால் நாளையுடன் கூட்டத் தொடர் முடிவடையும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

 

கொரானோ அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க பல்வேறு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒரு நாள் மக்கள் ஊரடங்கை அனுசரித்து வீட்டிற்குள் இருந்தபடி வெளியில் வரவில்லை.

 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைககள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 9-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என பெரும்பாலானவைகளை மூட உத்தரவிட்ட நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், சட்டப்பேரவையை ஒத்தி வைக்க சபாநாயகர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்ததால், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சட்டப் பேரவையில் ஆவேசம் காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவையில் இப்படி கூட்டமாக அமர்ந்திருப்பது சரியா? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து 2 நாட்களாக அலுவல் ஆய்வுக்குழு கூடி வரும் மார்ச் 31-ந் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில், கொரானோ அச்சுறுத்தல் காரணமாக உடனடியாக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்தன. இதனால், இன்று காலை சபாநாயகர் ப.தனபால் அவசரமாக ஆலோசனை நடத்தினார்.

 

பின்னர் சட்டப் பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் தனபால், இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மாலையுடன் முடிவடைவதாக அறிவித்தார். 31-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த பல்வேறு மான்யக் கோரிக்கைகள் அனைத்தும் நாளையே அவையில் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.


Leave a Reply