ஓ.பி.சி கிரீமி லேயர் தீர்ப்பு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓ.பி.சி) கிரீமி லேயர் தகுதியை, பெற்றோரின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது என்று கடந்த மார்ச் 11-ம் தேதி வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிசெய்துள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் கோரிய மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தீர்ப்பை எதிர்காலத்திற்கு மட்டுமே பொருந்துமாறு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்தது. இதற்கான அமலாக்கத்தைத் தள்ளிப்போடுவதற்கு “எந்தவொரு நியாயமான அல்லது உறுதியான காரணமும் இல்லை” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், இதை அமல்படுத்த அரசுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை, அந்த அவகாசம் முடிவடைந்துவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கால அவகாசத்தை மேலும் 8 வாரங்களுக்கு நீட்டித்தது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், “2025-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் மார்ச் 6, 2026-ல் வெளியிடப்பட்ட போதிலும், அதிகாரிகளுக்கான பணியிட ஒதுக்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த ஒதுக்கீட்டு நடவடிக்கை நிலுவையில் இருப்பதாலும், மார்ச் 11, 2026 தீர்ப்பின் அமலாக்கத்தைத் தள்ளிவைக்கத் தகுந்த காரணங்கள் இல்லாததாலும், அத்தீர்ப்பில் விளக்கப்பட்ட கிரீமி லேயர் கோட்பாடே 2025 சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஓ.பி.சி விண்ணப்பதாரர்களின் பணியிட ஒதுக்கீட்டுக்குக் கட்டுப்படியாகும்” எனக் குறிப்பிட்டது.
அதேவேளையில், மனுதாரர்களான விண்ணப்பதாரர்கள் ஓ.பி.சி நான்-கிரீமி லேயர் (Non-Creamy Layer) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இடஒதுக்கீட்டின் நன்மைகளைப் பெற தகுதியுடையவர்கள் என்ற மார்ச் 11 தீர்ப்பு, “ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகளையோ அல்லது நியமனங்களையோ மீண்டும் திறப்பதற்கோ, அல்லது பிற நபர்களின் முன்னுரிமையை பாதிப்பதற்கோ வழிவகுக்காது” என அமர்வு தெளிவுபடுத்தியது.
“மார்ச் 11, 2026 தீர்ப்பிற்கு முன்னர் முடிவடைந்த தேர்வுகள் மற்றும் நியமனங்களை மீண்டும் தோண்டித் துருவுவதற்கு இந்தத் தீர்ப்பின் கருத்துக்கள் அடிப்படையாக அமையாது” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இதேபோன்ற சூழலில் தங்களை கருதிக்கொண்டு பல்வேறு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது பிற அதிகாரப்பூர்வ அமைப்புகளின் முன் வழக்கு நிலுவையில் வைத்திருப்பவர்களின் கோரிக்கைகளை, சம்பந்தப்பட்ட அமைப்புகள் வழக்குகளின் தகுதி அடிப்படையில் முடிவு செய்யலாம் என்றும் அமர்வு விளக்கியது. “1993 அலுவலகக் குறிப்பாணை மற்றும் 2004 கடிதம் குறித்து இந்த நீதிமன்றம் வழங்கிய விளக்கங்களைச் சட்டப்படி கணக்கில் எடுத்துக்கொண்டு அக்கோரிக்கைகளை அணுகலாம் என்பதைத் தவிர, அவர்களின் மனுக்களின் தகுதி குறித்து இந்த நீதிமன்றம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்றும் கூறியது.
இந்தச் சிக்கலானது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (ஓ.பி.சி) யார் கிரீமி லேயர் வரம்பிற்குள் வருவார்கள் என்பதைக் குறிப்பிட்டு 1993 செப்டம்பர் 8-ல் மத்திய அரசு வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணை (Office Memorandum) மற்றும் அது தொடர்பாக 2004 அக்டோபர் 14-ல் வெளியிடப்பட்ட விளக்கக் கடிதம் ஆகியவற்றைப் பற்றியதாகும்.
1993-ம் ஆண்டின் அலுவலகக் குறிப்பாணை, கிரீமி லேயர் நிலையைத் தீர்மானிப்பதற்கான வருமானம்/சொத்து மதிப்பீட்டில் இருந்து சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானத்தை விலக்கியிருந்தது. ஆனால், 2004-ம் ஆண்டின் விளக்கக் கடிதம் பொதுத்துறை நிறுவனங்கள் (பி.எஸ்.யூ) மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள வருமானத்தையும் சேர்க்க உத்தரவிட்டது. இது அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும், பொதுத்துறை/ தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கும் இடையே ஒரு “விரோதமான பாகுபாட்டை” உருவாக்கியதை மார்ச் 11 உத்தரவில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதன்படி, “சம்பள வருமானம் மட்டுமே ஒரு விண்ணப்பதாரர் கிரீமி லேயர் பிரிவில் வருகிறாரா என்பதைத் தீர்மானிக்கும் ஒரே அளவுகோலாக இருக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “மனுதாரரின் பெற்றோர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்தப் பதவியில் இருக்கிறார்கள் என்ற தகுதி மிக முக்கியமானது… ஒரு விண்ணப்பதாரர் கிரீமி லேயரா அல்லது நான்-கிரீமி லேயரா என்பதை அவர்களின் வருமானத்தை மட்டுமே வைத்துத் தீர்மானிக்க முடியாது…” என்றும் கூறியது.
“எனவே, 1993 அலுவலகக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளின் பிரிவுகள் மற்றும் தகுதிகளைக் கருத்தில் கொள்ளாமல், வருமான வரம்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கிரீமி லேயர் நிலையைத் தீர்மானிப்பது சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல” என்றும் அமர்வு சுட்டிக்காட்டியது.
விதிகளை உருவாக்க அரசுக்கு உரிமைவெள்ளிக்கிழமை உத்தரவில், மார்ச் 11 தீர்ப்பிற்குப் பிறகு செய்யப்பட்ட அனைத்துத் தேர்வுகள், நியமனங்கள் மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் அனைத்தும், நீதிமன்றத்தின் விளக்கத்திற்கு உட்பட்ட 1993 அலுவலகக் குறிப்பாணையின் படியே நிர்வகிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அதேநேரத்தில், அரசியலமைப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, இடஒதுக்கீடு மற்றும் கிரீமி லேயர் அளவுகோல்கள் தொடர்பான கொள்கைகளை புதிதாக உருவாக்க அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





