எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மரணம்
கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை மற்றும் பகடி எழுத்தாளர் பிரபு தர்மராஜ் வியாழக்கிழமை (நவம்பர் 5) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 42 வயதான பிரபு தர்மராஜின் மரணம் எழுத்தாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ். பதினெண் மேற்கணக்கு காதைகள், அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான், கசவாளி காவியம், ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும், கோலப்பனின் அடவுகள், சக்ரவர்த்தி திரையரங்கம், மில்லரின் மின்கம்பம், ராணி இல்லம், களிறும் பிடியும் பின்னே நானும், ச்சூ காக்கா, ஜாப் மார்சியா உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். பிரபு தர்மராஜ் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படித்தவர். மேலும் விசுவல் கம்யூனிகேஷனும் படித்துள்ளார். பிரபு தர்மராஜூக்கு சைமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
குமரி வட்டார வழக்கில் எள்ளல் தொனியில் எழுதக் கூடிய பிரபு தர்மராஜ், புத்தகங்கள் எழுதுவது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக இயங்கி வந்தார். தற்கால அரசியல், சமூக நிகழ்வுகளை நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இவரது பதிவுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.
இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை பிரபு தர்மராஜூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். எழுத்தாளர் பிரபு தர்மராஜின் மரணம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





