பா.ஜ.க-வில் பி.எச் பாண்டியன் மகன் வினோத் பாண்டியன்
மறைந்த சபாநாயகர் பி.எச் பாண்டியன் மகன் வினோத் பாண்டியன் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி என்ற கிராமத்தை சேர்ந்த பி.எச். பாண்டியன். கடந்த 1945 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி பிறந்த இவர், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மரணமடைந்தார். இவரது மனைவி சிந்தியாபாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்த இவர், கடந்த ஆண்டு 2019 மரணமடைந்தார்.
இவருக்கு டாக்டர் தேவமணி என்ற மகளும், பால் மனோஜ்பாண்டியன், அரவிந்த் பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்டியன் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். சட்டத்தில் முதுகலை படித்துள்ள இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். அ.தி.மு.க தொடங்கியதில் இருந்து 1972 முதல் அக் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். 1972 முதல் 1988 வரை அ.தி.மு.க வழக்கறிஞர் அணி மாநில தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 1977- 1991-ம் ஆண்டு வரையில் 4 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 1989-ல் அ.தி.மு.க ஜானகி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டப் பேரவை உறுப்பினர் என்ற பெருமை பெற்றவர்.
1980-1984-ல் தமிழக சட்டப் பேரவை துணை தலைவராகவும், 1985 முதல் 1989 வரை சட்டப் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். 1999-ல் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இருந்தார். பிரேசில், ஜப்பான், கனடா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற சட்டம், சட்டப் பேரவை, நாடாளுமன்ற நிர்வாகம் தொடர்பான மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். எம்.எல்.ஏ., எம்.பியாக இருந்தபோது திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றியிருக்கிறார். சேரன்மகாதேவி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்திருந்தார். இத்திட்டத்தை அப்போது எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்திருந்தார்.
சட்டப்பேரவை தலைவருக்குள்ள அதிகாரம் என்ன என்பதை மெய்ப்பித்தும் காட்டி இருந்தார் பி.எச். பாண்டியன். அவர் தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்தபோது 9 தி.மு.க சட்டப் பேரவை உறுப்பினர்கள் சட்ட நகலொன்றை எரித்தனர். இதையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்து அதிரடி காட்டியிருந்தார். பின்னர் தகுதிநீக்கம் செய்ததது தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றினார். நாட்டிலேயே எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் என்ற அதிரடி நடவடிக்கையை முதல் சபாநாயகர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.
இந்நிலையில், மறைந்த சபாநாயகர் பி.எச் பாண்டியன் மகன் வினோத் பாண்டியன் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். அவரது சகோதரர் மனோஜ் பாண்டியன் தி.மு.க. இருக்கும் சூழலில், வினோத் பாண்டியன் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டு இருக்கும் பதிவில், “தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அமரர் திரு. P H. பாண்டியன் அவர்களின் மகனும், வழக்கறிஞருமான திரு. P H. வினோத் பாண்டியன் அவர்கள், தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, மக்கள் சேவையிலும், தேசப்பணியிலும் ஈடுபடும் உயரிய நோக்கத்துடன், இன்று எனது முன்னிலையில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவரது அரசியல் மற்றும் பொதுவாழ்வுப் பயணம் சிறப்பாக அமையவும், கட்சியின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலாளர் திரு ஜான் பீட்டர் அவர்கள் உடன் இருந்தார்.” என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





