கொரானோ முன்னெச்சரிக்கை : திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் 31-ந் தேதி வரை மூடல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களையும் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் பின்னலாடை உற்பத்தியில் முன்னணி வகிப்பது திருப்பூர் ஆகும். இங்கு உற்பத்தியாகும் பின்னலாடைகள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி டாலர்களை அந்நியச் செலாவணியாக திருப்பூர் நிறுவனங்கள் ஈட்டித் தருகின்றன. இதனால் திருப்பூரை டாலர் சிட்டி என்றும் அழைப்பதுண்டு.

 

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் பின்னலாடை சார்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், தற்போது வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் இங்கு பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், பின்னலாடை தொழில் நிறுவனங்களுக்கு வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தி, கொரானோ அறிகுறி உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் வந்தோர் தாங்களாக முன் வந்து பரிசோதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தையும் சில நாட்களுக்கு மூடுவது குறித்தும், மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பின்னலாடை உரிமையாளர் சங்கத்தினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் அனைத்து தொழில்களும் முடங்கும் நிலையும், தொழிலாளர்கள் வருமான இழப்புக்கு ஆளாகும் நிலையும் உருவாகியுள்ளது.


Leave a Reply