முதல்வருக்கு தமிழக காங்கிரஸ் கடிதம்
பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-கடந்த மே 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஊழலற்ற, நேர்மையான, சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் தங்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த தி.மு.க ஆட்சியில் கோவை மாநகரில், “பெரியார் அறிவுலகம்” என்னும் நவீன நூலகம் கட்டப்பட்டது. ஏழு ஏக்கர் பரப்பளவில், முந்நூறு கோடி ரூபாய் செலவில், ஏழு தளங்களைக் கொண்ட இந்நூலகத்தை கடந்த அக்டோபர் 16-ம் தேதி நீங்கள் திறந்து வைத்தீர்கள். ஒரு ஆட்சியில் தொடங்கப்பட்டு, பெரும் பகுதி பணிகள் முடிந்த திட்டங்களை, கட்டிடங்களை, அடுத்து வரும் ஆட்சியில் திறந்து வைப்பது இயல்பானது. தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள், அ.தி.மு.க ஆட்சியிலும், அ.தி.மு.க ஆட்சியின் திட்டங்கள், தி.மு.க ஆட்சியிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், பெரியார் அறிவுலகத்தை தாங்கள் திறந்து வைத்ததும், தி.மு.க ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தைதான் திறந்து வைத்துள்ளார். ஆனாலும், திறப்பு விழாவில் அதுபற்றி பேசவில்லை என, தி.மு.க-வினர் வானத்திற்கும், பூமிக்கும் குதித்தனர். முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நவம்பர் 4-ம் தேதி, கோவை சென்று பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார். மாலையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
கடந்த தி.மு.க ஆட்சி என்பது, வரலாறு காணாத ஊழலாட்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எந்தத் திட்டத்திலும் ஊழல் இல்லாமல் இருந்தது இல்லை. திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க தொடங்கி இருக்கிறீர்கள். பள்ளிக் கல்வித் துறையில் மிகப்பெரிய ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில், பெரியார் அறிவுலகத்திற்கு, நூல்கள் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை சாகித்ய அகாடமி விருது பெற்ற, தமிழின் சிறந்த எழுத்தாளர்களின் ஒருவரான, பெருமாள் முருகன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பெரியார் அறிவுலகத்தின் நான்காம் தளத்தில், “அகல்விளக்கு பதிப்பகம்” வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்கள் இருப்பதாகவும், இந்த பதிப்பகத்தில் முகவரி உள்ளிட்ட அனைத்தும் போலி என்றும், இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவரும் போலி எழுத்தாளர்கள் என்றும் மிகுந்த வேதனையுடன் எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
300 பக்கங்களைக் கொண்ட நூல்களுக்கு, முன்னணி பதிப்பகங்கள், ரூ.300 முதல் ரூ. 400 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்கின்றன. வெளிநாட்டில் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்ட நூல்களுக்கு கூட இந்த விலை கிடைப்பதில்லை. ஆனால், அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூல்களுக்கு ரூ. 1,400க்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன். இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்பதையும், செயற்கை நுண்ணறிவு கொண்டு போலியாக நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியுள்ளார். கீழடி அகழாய்வில் நந்தி கண்டறியப்பட்டதாக, படத்துடன் ஒரு புத்தகம் உள்ளது. மகாகவி பாரதியாரின் எழுத்துகள் போல போலியாக எழுதப்பட்ட நூலும் உள்ளது.
நூல் கொள்முதல் செய்வதிலேயே இந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும்போது, கட்டிடம் கட்டியதில் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என்பதை நினைக்கும்போதே அச்சமாகத இருக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பெரியார் அறிவுலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வு செய்து, போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களை, மூன்றுநான்கு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி பெரும் ஊழலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடைய நூலகத்திலும் ஊழல் செய்தவர்களை தப்ப விட்டு விடக்கூடாது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு துரோகம் செய்த பெரும் கொள்ளைக்காரர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., திராவிடம் பேசுவதே கொள்ளையடிப்பதற்காகத் தான் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




