பள்ளித் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து வரும் ‌23-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா முன்னெச்சரிக்கையாக பள்ளித் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து வரும் 23ஆம் தேதி முடிவு தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக் கவசங்கள், கிருமி நாசினியை அத்தியாவசியப் பொருட்கள் ஆக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அவை போதுமான அளவு மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் ராஜேஷ் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அதில் சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டஅறிக்கையில் சுமார் 19 லட்சத்து 30 ஆயிரம் முகக் கவசங்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனா தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.ரேடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளை பரிசோதனை செய்து அவர்களில் 2,984 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்போது பள்ளித் தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

அதனையடுத்து வைரஸ் பரவலை தடுக்க பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள், கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கையிருப்பு குறித்தும் தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்தும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply