தமிழக – கேரள எல்லையில் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படும்..! கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழக – கேரள எல்லையில் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

 

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து நாடு முழுவதும் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 195 ல் இருந்து 206 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இன்று இந்தியாவில் உயிரிழந்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும்,கோவை மாவட்ட நிர்வாகமும்,தமிழக அரசும் இணைந்து கொரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனோ வைரஸ் குறித்தும்,கை கழுவும் முறை குறித்து விளக்கமளிக்கும் விதமாக விளம்பர பதாகைகளை கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும்,சாலை சந்திப்புகளிலும்,ஊராட்சி,பேரூராட்சிகளிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள வாளையார்,வேலந்தாவளம்,ஆனைகட்டி,வீரப்பகவுண்டனூர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகள் இன்று (20-03-2020) மாலை முதல் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் அனைத்து வாகனம் தொடர்பு நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர்
திரு கு. இராசாமணி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

இதனால் கேரள மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்,கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Leave a Reply