“சட்டமன்றத்தில் கூட்டமாக இருப்பது சரியா?” உடனே ஒத்திவைக்க வேண்டும்..! கொந்தளித்த மு.க ஸ்டாலின்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சட்டமன்றத்தில் கூட்டமாக இருப்பது சரியா? சட்டமன்றத்தை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு, உடனேஅலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்தார். இதனால் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா பரவலை தடுக்க கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்;பொது வெளியில் நடமாடக் கூடாது என்பதையே தீர்வாக கருதி பல்வேறு நாடுகளும் பெரும் கெடுபிடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

நமது பிரதமர் மோடியும் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதும் இதையே வலியுறுத்தினார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க அழைப்பு விடுத்ததுடன், 10 வயதுக்கு கீழ் உள்ளோரும், 65 வயதுக்கு மேற்பட்டோரும் வெளியில் செல்லாமல் இருக்கவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கூட்டத் தொடரை ஒத்தி வைக்குமாறு திமுக தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. ஆனால், சபாநாயகரும், முதல்வரும் அதை ஏற்காமல், சட்டப்பேரவையில் அனைத்து முன்னெச்கரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறி விட்டனர்.

 

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் இதே பிரச்னையை கொண்டு வந்து ஆவேசமாக பேசினார் மு.க.ஸ்டாலின் . 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூட்டமாக கூடுவது வேண்டாம் என்று வலியுறுத்தும் நிலையில், இப்படி சட்டசபையில் கூட்டமாக இருப்பது சரியா? என ஆவேசமாக சுட்டிக்காட்டினார். உடனே சட்டசபையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஸ்டாலின், சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க கோருவது பீதியை ஏற்படுத்த அல்ல ;இந்த நேரத்தில் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் இருக்க வேண்டும் என்பதால் தான் என்றார்.

இதனால் இந்த முறை ஸ்டாலினின் கோரிக்கைக்கு செவிசாய்த்த சபாநாயகர் தனபால், சட்டமன்றத்தை ஒத்தி வைப்பது குறித்து ஒரு மணிக்கு ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அறிவித்தார். எனவே இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படலாம் என்றே தெரிகிறது.


Leave a Reply