கொரானா அச்சுறுத்தல்: கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்பட பலவற்றையும் மூட உத்தரவு..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா அச்சுறுத்தலால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா இடங்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள் என மக்கள் கூடும் இடங்களை வரும் 31-ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கொரானா பாதிப்பு இந்தியாவுக்கும் இப்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவில் கொரானா தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து 120 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றன. மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு ஏக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழகத்தில் கொரானா பாதிப்பு பெரிய அளவில் இல்லையென்றாலும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் கொரானா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கொரானா முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் விபரம் வருமாறு:

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 16-ந் தேதி வரை விடுமுறை .10,11,12-ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்.அனைத்து அங்கன்வாடி மையங்களும் 31-ந் தேதி வரை மூடப்படும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான சத்துணவுகள் வீடு தேடி வழங்கப்படும்.

 

திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர புதிய நிகழ்வுகளை நடத்தக் கூடாது. அனுமதி வழங்கக் கூடாது.கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தியேட்டர்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அனைத்தையும் மூட வேண்டும்.

 

உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு இடங்களையும் மூட உத்தரவு

 

டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள், கிளப்புகள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளங்களையும் மூட உத்தரவு

 

அதிகமாக கூட்டம் கூடும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகளுக்கு அனுமதி தரக்கூடாது. பயிற்சி வகுப்புகள் கருத்தரங்கு விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுக்கும் அனுமதி இல்லை

 

இந்த அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் கொரானா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கொரானா குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கும் எனவும், விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

இதே போல் மத்திய அரசும் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.
.


Leave a Reply