விவாதத்திற்கு நாங்கள் தயார்! நீங்க ஓடிவிடக்கூடாது – ராகுலுக்கு அமித் ஷா பதில்
காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விவாதத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார். இந்நிலையில், விவாதத்திற்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவாலை ஏற்றுள்ளார்.இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இதில், கடந்த 1ஆம் தேதி டெல்லியில் பெரும் பேரணியை இந்தியா கூட்டணி நடத்தியது.
அதேசமயம், ‘ஜனநாயகம் காப்போம்; அராஜகம் ஒழிப்போம்’ எனும் பேரணியை பாஜக முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று ஹரியானா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ‘ஜனநாயகம் காப்போம்; அராஜகம் ஒழிப்போம்’ பேரணி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமரை விவாதிக்க அழைப்புவிடுத்திருந்த ராகுல் காந்திக்கு பதில் கொடுத்து, எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க தயார் எனவும் ஆனால், “பதில்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடிவிடுவீர்கள்” எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது; “நீங்கள் (ராகுல் காந்தி) ஒரு பொறுப்பான விவாதத்தில் ஈடுபட விரும்பினால், நாடாளுமன்றத்திற்குள் வந்து விவாதியுங்கள். நேருக்கு நேர் சந்திப்போம்! ஆனால், கிடைக்கப்போகும் பதில்களை உங்களால் எதிர்கொள்ள முடியாது. எப்போதும் போல, நீங்கள் அங்கிருந்து ஓடிவிடுவீர்கள்.
எஸ்.ஐ.ஆர். விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட நாங்கள் தயார். உங்களுக்கு பிரதமருடன் விவாதிக்க வேண்டும் என்றால், அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதுங்கள். இதனை நான் உங்களுக்கு சவாலாகவே சொல்கிறேன். 80 ஆண்டுகள் பழமையான ஒரு ஜனநாயக நாடு, உங்கள் ஏமாற்று வேலைகளுக்கு ஏமாந்துவிடும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? நாங்கள் மக்கள் மத்தியில் களப்பணியாற்றுபவர்கள். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும், நமது கிராமங்களிலும், வயல்வெளிகளிலும் பாரதிய ஜனதா கட்சி உங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும்.
நீங்கள் மக்களைத் திரட்ட முயன்றால், அங்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கக் காத்திருப்பார்கள். ‘ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற இந்த பேரணி, ராகுல் காந்திக்கு ஒரு வலுவான மற்றும் உறுதியான பதிலடியை வழங்கியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





