“ம.பி. சட்டப்பேரவையில் ஓட்டெடுப்பு இல்லை!” கொரானாவை காரணம் காட்டி 26-ந்தேதி வரை ஒத்திவைப்பு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo :


மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை.

 

சட்டசபை கூடிய சிலநிமிடங்களிலேயே கொரானாவை காரணம் காட்டி வரும் 26-ம் தேதி வரைஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.இதனால் 10 நாட்களுக்கு கமல்நாத் அரசுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.

 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் திடீரென பாஜகவில்இணைந்தார்.அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் உருவானது.

 

இந்நிலையில் இன்று ம.பி. சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூட இருந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி தாண்டன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கடிதத்தை சபாநாயகர் பிரஜாபதி இன்னமும் ஏற்காத நிலையில், இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? இல்லையா? என்பதும் சந்தேகமாக இருந்தது.

 

ஏனெனில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக எந்த அறிவிப்பையும் சபாநாயகர் வெளியிடவில்லை. இன்றைய சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக எந்த ஒரு குறிப்பும் இடம்பெறவில்லை. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது சந்தேகமே என்று கூறப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ம.பி சட்டப்பேரவை கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதாலும் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதாலும் ஆளுநர் லால்ஜி தாண்டன் உரை இடம் பெற்றது. மிகச் ரத்தினச் சுருக்கமாக ஒரே ஒரு நிமிடத்தில் தனது உரையை நிகழ்த்திவிட்டு ஆளுநர் வெளியேறினார்

 

அடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் எழுந்து சட்டப்பேரவையில் கமல்நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குரல் கொடுத்தனர். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. இந்நிலையில், கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கையை காரணமாக காட்டி வரும் மார்ச் 26-ம் தேதி வரை சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் பிரஜாபதி திடீரென அறிவித்தார். இதை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

 

ம.பி. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் கமல்நாத் அரசு வீழ்வது உறுதி என்றே கூறப்பட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற நிலையில், சட்டப்பேரவையையே 10 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

இதனால் கமல்நாத் அரசுக்கு 10 நாட்ளெுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது என்றே கூறலாம். ஆனால், சபாநாயகரின் உத்தரவை ஆளுநர் ஏற்பாரா? இதனால் ஆளுநர் vs சபாநாயகர் மோதல் வெடிக்குமா?என்ற கேள்வியும் எழுந்து ம.பி. அரசியலில் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.