கொரானா முன்னெச்சரிக்கை : “டாஸ்மாக்” கடைகளும் மூடப்படுமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது கொரானா வைரஸ் எனும் கொடிய ஆட்கொல்லி தொற்று நோய். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களை மூட மத்திய . மாநில அரசுகள் உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. தமிழகத்திலும் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

அண்டை மாநிலங்களின் எல்லைகளில் உள்ள தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடக்கோரி சூரியபிரகாஷ் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் சாலையோரங்களிலும் தெருவோரங்களிலும், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலைய பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. குடி மகன்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் பார்களில் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

 

இதனாய் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் கொரானா பரவும் ஆபத்தும் அதிகமாக உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் சூரியபிரகாஷ் கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், டாஸ்மாக் பார்களில் கொரானா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனால்,கொரானா காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.