திமுக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகிறார் துரைமுருகன்..! பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


திமுக பொதுச்செயலாளராக
கட்சியின் சீனியரான துரைமுருகன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் இன்று தனது பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளதாகவும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

திமுக பொதுச்செயலாளராக 1977 முதல் தொடர்ந்து 43 ஆண்டுகள் பதவி வகித்தவர் பேராசிரியர் க.அன்பழகன். பத்து நாட்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக 98 வயதில் க. அன்பழகன் காலமானார். இதைத்தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது.

 

புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவராகவும், தற்போது பொருளாளராகவும் உள்ள துரைமுருகன் தேர்வு செய்யப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது.

இந்நிலையில், தற்போது திமுக பொருளாளர் பொறுப்பிலுள்ள துரைமுருகன் அந்த பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். துரைமுருகனின் விருப்பத்திற்கு ஏற்ப அவருடைய ராஜினாமாவை தாம் ஏற்றுக்கொண்டதாகவும், 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியுடன் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதனால் வரும் 29-ந் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன், கட்சியின் பொதுச்செயலாளராக போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. பொதுக்குழுவில் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அப்பதவிக்கு கட்சியில் சீனியராக உள்ள டி.ஆர் பாலு, பொன்முடி, எ.வ. வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply