கட்டுப்பாடுகள் அரசியல்வாதிகளுக்கு கிடையாதா? 2000 பேர் திரண்ட திருமண விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்றதால் சர்ச்சை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangements


கொரானா பீதியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநிலத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், மதுபானபார்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடவும், திருமணம் போன்ற விழாக்களிலும் 100 பேருக்கு மேல் பங்கேற்க வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இரண்டே நாட்களில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த திருமண விழாவில் பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது.

 

கொரானா வைரஸ் பீதியால் உலகமே நடுநடுங்கி போயுள்ளது. இன்று வரை இந்த வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6500 ஐ தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உலக நாடுகள் பலவும் போர்க்கால அடிப்படையில் .

 

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் திரளானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும், வெளியூர் பயணங்களை தளர்க்க வேண்டும் என்பது தான் தற்காலிக தீர்வு என நம்பப்படுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்படுன்றன. கோவில்கள், சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

 

இந்தியாவிலும் மத்திய மாநில அரசுகள் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மதுபான பார்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அம்மாநில முதல்வர் எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். மேலும் திருமணம் போன்ற பொது விழாக்களில் 100 பேருக்கும் மேல் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுகளை கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த முதல்வர் எடியூரப்பா, ரெண்டே நாட்களில் அவரே மீறியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

கர்நாடக மாநில பாஜக தலைவர்களில் முக்கியமானவரும் எம்எல்ஏவுமான மகந்தேஷ் என்பவரின் மகள் திருமணம் நேற்று நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் , எம்பி, எம்எல்ஏக்கள் என ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தடபுடலாக நடந்த திருமண விருந்திலும் பங்கேற்றனர். இந்த திருமண விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தாக கூறப்படுகிறது.

 

திருமணம் போன்ற பொது விழாக்களில் 100 பேருக்கு மேல் கூடக் கூடாது என உத்தரவிட்ட முதல்வர் எடியூரப்பாவே அதனை மீறி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆடம்பர திருமண விழாவில் பங்கேற்றது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

 

கட்டுப்பாடுகள், உத்தரவுகள். சட்டங்கள் எல்லாம் பொது மக்களுக்கு மட்டும்தானா? அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? என விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடையே இந்த திருமண விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வர் எடியூரப்பா முடிவெடுத்து இருந்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு வராவிட்டால் என் மானம், மரியாதை போய்விடும் என மணமகளின் தந்தையான பாஜக நிர்வாகி வீம்பு பிடித்ததால் எடியூரப்பா பங்கேற்றதாகவும் முதல்வர் அலுவலகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply