“5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை.!” ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மழலையர் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தமிழக பள்ளிக் கல்வித் துறை என்றாலே ஒரு குழப்பமான துறை என்றாகிவிட்டது. உயரதிகாரிகள்
திடீரென ஒரு உத்தரவை போடுவதும், அந்த உத்தரவு சர்ச்சையானதும் அதனை அமைச்சர் மறுப்பதும், பின்னர் ஒரு புதிய உத்தரவு பிறப்பிப்பதும் என பல விஷயங்களில் தொடர்ந்து சர்ச்சைதான். இந்த குழப்பத்தின் உச்சகட்டமாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகளுக்கும், கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள 7 மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் (சனிக்கிழமை) காலையில் இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அதே கல்வித்துறை அதிகாரிகள் மற்றொரு உத்தரவை பிறப்பித்தனர். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவரும் குழப்பம் அடைந்தனர். விடுமுறை குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளிகளும் குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில் விடுமுறை உண்டா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்தது.

 

இதற்கிடையே, சனிக்கிழமை மாலையே இந்த குழப்பத்துக்கு இம்முறை கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யே விளக்கம் சொல்ல வேண்டியதானது. மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை உறுதி செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது பற்றிய முறையான அறிவிப்பு நாளை (ஞாயிறு) வெளியிடப்படும் என மதுரை விமான நிலையத்தில் கூறிவிட்டுச் சென்றார்.

 

இந்நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில் மழலையர் பள்ளிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் விடுமுறை குழப்பம் தீர்ந்தது என மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் நிம்மதியடைந்தனர்.

ஆனால், நேற்றிரவு தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது, கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை. பள்ளிகளுக்கு பூட்டு போடக்கூடாது. ஆசிரியர்கள் தினமும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும். பள்ளிகளை திறந்து தங்கள் அன்றாட அலுவலக பணிகளை கவனிக்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்றே கூறலாம்.

 

எங்களுடைய பணியே மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தான், ஆனால் மாணவர்களே இல்லாமல் நாங்கள் மட்டும் பள்ளி சென்று சும்மா அமர்ந்து அரட்டை அடித்து விட்டு வர வேண்டுமா? கொரானா பாதிப்பு எங்களுக்கும் வராதா? என ஆசிரியர்கள் அதிருப்தியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Leave a Reply