ராஜ்யசபா தேர்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு?

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நிலையில் வரும் 18-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

 

தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. இதனால் இந்த 6 இடங்களுக்கும் வரும் 26-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோரும், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கூட்டணியில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் கடந்த 13-ம் தேதி நிறைவடைந்தது. அதிமுக சார்பில் 3 பேர் திமுக சார்பில் 3 பேர் மற்றும் சுயேட்சையாக மூன்று பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஒரு வேட்பாளரை முன்மொழிய 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும் என்பது அவசியம் என்ற நிலையில், சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த மூன்று பேருக்கும், எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சுயேட்சைகள் 3 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எனவே, வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள், நாளை மறுதினம் என்பதால் அன்று மாலை, திமுகவைச் சேர்ந்த 3 பேரும், அதிமுக தரப்பில் 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சட்டசபை செயலாளர் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.