பாண்டே அறிவித்த “சாணக்யா” விருது..! நல்லகண்ணு ஏற்க மறுப்பு! சமூக வலைதளங்களில் சர்ச்சையோ சர்ச்சை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


பிரபல ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே, தாம் நடத்தும் சாணக்யா யூ டியூப் சேனலின் முதல் ஆண்டு விழாவை இன்று நடத்துகிறார். இந்த விழாவில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணுக்கு சாணக்யா விருது வழங்கப் போவதாக அறிவிக்க, அதனை ஏற்க நல்லகண்ணு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி சமூக வலைதளங்ளில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து புகழ் பெற்றவர் ரங்கராஜ் பாண்டே . அரசியல் தலைவர்களுடனான நேர்காணல், விவாதங்கள், மேடைப் பேச்சுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்ற பாண்டே, அஜீத்தின் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். பாண்டே மீது பாஜக ஆதரவாளர் என்ற ஒரு முத்திரை கூட விழுந்து சர்ச்சையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆலோசகராகப் போகிறார் என்பது போன்ற செய்திகளும் உலா வந்தன.

 

இந்த சர்ச்சைகளால் செய்தி சேனலில் இருந்து விலகிய பாண்டே, தற்போது சாணக்யா என்ற பெயரில் தனியாக யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் பொதுவாக பாஜக ஆதரவு நிலைப்பாடுடனான செய்திகளே அதிகம் இடம் பெறுவதும், சாணக்கியா என்ற லோகோவும் பாண்டேவை பாஜக ஆதரவாளர் என்றும் முத்திரையே குத்தப்பட்டு விட்டது எனலாம்.

 

இந்நிலையில் சாணக்யா சேனலின் முதலாம் ஆண்டு விழாவை இன்று பாண்டே நடத்துகிறார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் இன்று மாலை நடைபெறும் விழாவில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தமிழக அரசியல் தலைவர்களுக்கு சாணக்யா விருது வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த விருதுக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விழாவில் விருது வழங்கப்படுவதாகவும், தொடர்ந்து இன்றைய அரசியல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல் பற்றி பாண்டே பேசப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பாண்டே வழங்கும் சாணக்யா விருதை ஆர்.நல்லகண்ணு ஏற்க மாட்டார் என்றும் விழாவில் பங்கேற்கவும் மாட்டார் என்றும் அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான சி.மகேந்திரன் இத்தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 80 ஆண்டுகளாக இலட்சிய உறுதியோடு வாழும் அய்யா நல்லகண்ணு அவர்கள் கொள்கை உறுதியோடு வாழும் இன்றைய தலைமுறையின் வழிகாட்டி. நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் அறிவித்துள்ள விருதினை அவர் ஏற்க மாட்டார் அதில் கலந்து கொள்ள மாட்டார் கொள்கையில் சமரசம் இல்லை என சி மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

 

94 வயதாகும் ஆர்.நல்லகண்ணு பொதுவுடமை இயக்கத்தில் சிறு வயது முதலே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல்வாதிகளில் மூத்த தலைவர் இவர்தான். பொதுவாழ்க்கையில் லட்சியத்துடன் செயல்பட்டு இன்றும் துடிப்பாக செயல்பட்டு வருபவர். இதனால் பாஜக பின்னணி கொண்ட விழாவில் நல்லகண்ணு பங்கேற்பதற்கு அவரது கட்சியினரும், பல்வேறு கம்யூனிஸ்ட் இயக்கங்கள், பெரியார் மற்றும் தமிழ் இயக்கத்தினரிடைய கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தான் இந்த விருது புறக்கணிப்பு என்று கூறப்படுகிறது.

 

இதனால் சி.மகேந்திரன், விருதை நல்லகண்ணு ஏற்க மாட்டார் என பதிவிட்டுள்ளதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு முட்டிக்கொள்வது பெரும் சலசலப்பாகியுள்ளது.


Leave a Reply