ஸ்ரீ பகவதி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.முருகன் பங்கேற்பு

Publish by: சஃபியுல்லா --- Photo :


உலக நுகர்வோர் தின ( மார்ச் 15 ) விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஸ்ரீ பகவதி ஏஜென்சீஸ் இந்தியன் ஆயில் டீலர்ஸ் மற்றும் அவினாசி தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு பூண்டியில் உள்ள ஸ்ரீ பகவதி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடந்தது.

 

கருத்தரங்கிற்கு அவினாசி தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர் பாட்சா தலைமை தாங்கினார். ஸ்ரீ பகவதி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க் உரிமையாளர் தனசேகர் முன்னிலை வகித்தார். தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொது செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சென்னியப்பன், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளித்து ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அதேபோல் அரசு அலுவலகங்களில் தூய்மை பணியை மேற்கொண்டு கிருமி நாசினி அடிக்கவேண்டும் போன்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேசினார்கள்.

 

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலரும், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான எம்.முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது : ஆர்.டி.ஐ., ஆர்.டி.இ உள்பட பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி செம்மையாக செய்து வருகிறது. நாம் அதனை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி கூட்டங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டும். இதற்கு நாம் அதிகமான கேள்விகளை கேட்க வேண்டும்.

திருப்பூரில் உள்ள பிக் பஜாரில் டாக்டர் ஒருவர் பொருட்களை வாங்கியுள்ளார். அதில் பேரிட்சை பழமும் ஒன்று. கடையில் அந்த பேரீச்சைக்கு விலையாக 150 ரூபாய் என எழுதப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே ஒருதாளில் 85 என குறிப்பிட்டு இருந்தது. உடனே அந்த டாக்டர் இதுகுறித்து நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்தார். புகாரில் உண்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைக்கு ரூ.90 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டு அந்த அபதாரத்தை கட்டினர். இவ்வாறு அவர் பேசினார்.

 

தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்கில் விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசல், அதன் அடர்த்திகளை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு காட்டினார். பின்னர் பெட்ரோல் அடிக்கும்போது உபயோகிக்கப்படும் ஸ்விப்பிங் கார்டு மிஷினை கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்வதையும் செய்து காண்பித்தார். தொடர்ந்து பொதுமக்கள் நுகர்வோர் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். முடிவில் கவிதா நன்றி கூறினார். விழாவினை முருகானந்தம் தொகுத்து வழங்கினார்.


Leave a Reply