22 எம்எல்ஏக்களின் ராஜினாமாவிற்கு என்ன காரணம்?
மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அதற்கான காரணம் குறித்து தம்மிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் பிரஜாபதி கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், அம்மாநில பேரவையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
107 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதா பெரும்பான்மையைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 22 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ள சபாநாயகர் அது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
தங்கள் முடிவு, சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆனதா அல்லது வெளியில் வந்த நெருக்கடியில் ஆனதா என தெரிவிக்குமாறு சபாநாயகர் கேட்டுள்ளார். இதனிடையே ராஜினாமா செய்த 22 பேரில் 19 பேர் பெங்களூரு அருகே சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களை சந்திக்க மத்திய பிரதேசம் அமைச்சர் ஜீத்து பட்வாரி தனது ஆதரவாளர்களுடன் வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




